பார்வை

உலகெங்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், புத்திலக்கியப் படைப்புகள், கலையாக்கங்கள், சகமனிதர்களோடு உறவாடும் பண்பு, சக மனிதரின் துயர்கண்டு இரங்கும் இயல்பு, கொள்கை உறுதி, ஈகை, அஞ்சாமை, விடுதலை உணர்வு இவையாவும் தாய் மொழி இன்றிச் சாத்தியம் இல்லை.

தாய்மொழியில் இல்லாத எதுவும், எளிய மக்களைச் சென்றடைவதுமில்லை, சென்றடைந்தாலும், அது அவர்களுக்கு முழுப் பயனைத் தருவதுமில்லை. இது கல்விக்கும் சாலப்பொருந்தும்.அகிலமெங்கும், சகமனிதர்களை நேசித்து, அவர்களோடு உறவாடி, அவர்களின் துயர்கண்டு இரங்கி, கொள்கை உறுதி பூண்டு, பகை கண்டு அஞ்சாமல், ஈகம் செய்து, விடுதலை உணர்வூட்டி, மக்களைத் திரட்டிப் போராடி வெற்றி கண்ட தலைவர்கள் அனைவரும், இவற்றைத் தம் தாய்மொழி மூலமே மெய்ப்படுத்தினர்.

ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தி வளப்படுத்தும், அறிவியல் கல்வியின் தமிழ் நாட்டுப் பங்களிப்பான தகைசால் தமிழர்கள், மாண்பமை அப்துல்கலாம், திரு மயில்சாமி அண்ணாதுரை, திரு க.சிவன் உள்ளிட்ட பொறியாளர்கள், தாய்த்தமிழ்க் கல்வியின் ஒளி வீசும் சுடர் மீன்கள். சமூக அறிவியல் உள்ளிட்ட பிற துறைகளிலும், தமிழ் நாடன்றி உலகெங்கும், இதுவே மெய் நடப்பு.

மக்கள் மருத்துவர் கு.கணேசன் அவர்கள், மருத்துவ அறிவியலை எளிய தமிழில் எழுதி மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இதற்காக உலகத் தமிழ்ச்சங்கம் (இங்கிலாந்து) அவருக்கு வாழ்நாள் மருத்துவச் சாதனையாளர் விருது வழங்கியது. சமூகத்தை மேம்படுத்திய இச்செயல்களெல்லாம், தாய்மொழியின்றிச் சாத்தியம் இல்லை. 1930 ஆம் ஆண்டுக்குப் பின் நாம் அறிவியல் துறையில் ஒரு நோபல் பரிசும் பெறவில்லை என்பது, நம் உயர்கல்வி தமிழில் இல்லை என்பதற்கு ஒரு எதிர்மறைச் சான்றாகும்.

’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்’ என்று மாப்புலவன் பாரதிதாசன் முழங்கியது, மறுக்கமுடியாத உண்மையாகும். நம் சமூகத்தின் முன்னேற்றத்தில் தாய்த்தமிழ்க் கல்வியின் பங்கு இன்றியமையாதது, தவிர்க்க முடியாதது. மொத்தத்தில், தாய்த்தமிழின்றித் தமிழ்ச்சமூகம் இல்லை. தாய்த்தமிழ்க் காப்பே தமிழ்ச் சமூகக் காப்பு என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


பணி

தாய்த்தமிழ்க் கல்வி, என்ற கருத்தியலின் செயல் வடிவமே, தாய்த் தமிழ்ப் பள்ளிகள்.

  • கல்வி வணிகமயமாகியுள்ள இன்றைய சூழலில், வணிக நோக்கமின்றி, அப்பழுக்கற்ற கல்விப்பணி ஆற்றுவது.
  • அறிவுக்கான கதவைத் தாய்மொழியே திறக்கும், என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில், தாய்மொழியாம் தமிழ்மொழியில் அனைத்து நிலைகளிலும் கல்வி வழங்குவது.
  • சாதி, சமய,வர்க்க, பால் வேறுபாடற்று அனைவருக்கும் அறிவும், பண்பும் ஊட்டக் கூடிய கல்வியை வழங்குவது.
  • ”மெய்ப்பொருள்” காணும் அறிவையும் “ஒத்தது அறிந்து” வாழும் சமத்துவப் பண்பையும் மாணவர்களிடையே வளர்த்து நல்ல குறள்நெறிக் குடிமக்களாக உருவாக்குவது.
  • உலகின் அறிவு வாசல்கள் அனைத்தையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் திறக்க வழிவகை காண்பது. என்ற கோட்பாடுகளுடன் சற்றொப்ப 20 முதல் 33 ஆண்டுகளாக வணிகநோக்கமின்றித் தமிழ்நாடெங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் நடந்து வருகின்றன.
  • இன்றைய நிலையில் 16 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 18 பள்ளிகள் இயங்கிவருகின்றன.
  • எங்கள் பள்ளிகளில், மிக மிகக் குறைந்த கட்டணம், சில பள்ளிகளில் கட்டணமே இல்லாக் கல்வி.